Sunday, January 18, 2009

பள்ளிப் பருவ செக்ஸ் அவலங்கள்,ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்!

பள்ளியறை' என்ற சொல்லே தமிழில் கொஞ்சம் விவகாரமான சொல்தான்! அது பள்ளி வகுப்பறையையும் குறிக்கும். காதலர்கள் துயில் கொள்ளும் கட்டிலறையையும் குறிக்கும். இப்படி இரண்டு பொருள் தரும் பள்ளியறை என்ற வார்த்தையை எந்த மகானுபாவன் எந்த நேரத்தில் உருவாக்கினாரோ தெரியவில்லை? அந்த இரண்டு அர்த்தங்களுமே ஒன்றுதான் என்ற நிலை மெல்ல மெல்ல உருவாகி வருகிறது.

ஐ.டி. எனப்படும் ஹைடெக் மையங்கள்தான் இதுநாள் வரை முறை தவறிய பாலுறவுகளுக்கு மொத்தக் குத்தகைக்கான இடம் என்று நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ அந்த எண்ணத்தை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். ஐ.டி. நிறுவனங்களுக்கு ஏன் போக வேண்டும்? நம்மூர்ப் பள்ளிகளில் கூட பாலியல் உறவுகள், அதிலும் பிஞ்சில் பழுத்த பாலுறவுகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ``ஒரே ஓர் அரசுப்பள்ளியில் மட்டும் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்கும் 32 மாணவர்கள் மன்மதக் கலையில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். ஆளுக்கு இரண்டு பெண்கள் வீதம் அவர்கள் செக்ஸ் உறவு வைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்களில் மாணவிகளும் அடக்கம்'' என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிடுகிறார் கோவையைச் சேர்ந்த மனோதத்துவ மருத்துவர் மொஹைய்தீன்.

கோவையில் `ஞானவாணி' என்ற எஃப்.எம். வானொலியில் `மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், அதைத் தீர்க்கும் முறைகள்' பற்றி கடந்த இரண்டாண்டுகளாகப் பேசி வருகிறார் மருத்துவர் மொஹைய்தீன். உளவியல் தொடர்பான நேயர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் அதில் அவர் பதிலளிப்பார். அதுமட்டுமல்ல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, ஊட்டி, கூடலூர், ஈரோடு, சேலம், நாமக்கல் போன்ற பல பகுதிகளுக்குச் சென்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவச மனோதத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.

மருத்துவர் மொஹைய்தீனை நாம் சந்தித்துப் பேசினோம். பள்ளிகள் தற்போது பாலியல் கூடங்களாக மாறிவரும் பிரச்னை, மாணவர்கள் மதன், ரதியாக மாறும் பிரச்னைக்குள் போகும் முன்னால் அதற்கு முத்தாய்ப்பாக சில விவரங்களைச் சொன்னார் அவர்.

```இந்தியா முன்னேற வேண்டுமானால் வருங்கால இளைஞர்களான மாணவ மணிகளின் மன சலனங்கள் அகற்றப்பட வேண்டும்' என்று நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அடிக்கடி கூறுவார். இது என்னை மிகவும் ஈர்த்த கருத்து. தற்போது பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் மனரீதியாக பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

சில மாணவர்கள் படிப்பில் நாட்டமில்லாமல் எதையோ பறிகொடுத்ததைப் போல இருப்பார்கள். நன்றாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்களால் படிக்க முடியாது. அந்த வேளையில் அவர்களுக்குத் தகுந்த மனப்பயிற்சி அவசியம். இல்லாவிட்டால் அதுவே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடும்.

இப்படியான மாணவ, மாணவிகளை `சைக்காலஜிஸ்ட்' எனப்படும் மனோதத்துவ மருத்துவர்களிடம் கூட்டிப்போக வேண்டுமே தவிர, `சைக்கியாட்ரிஸ்ட்' எனப்படும் மனநோய் மருத்துவர்களிடம் கூட்டிப்போய் சிகிச்சை தரக் கூடாது. அவர்கள் மயக்க மருந்து தந்து தூங்க வைத்து, ஒருகட்டத்தில் அந்த மாணவர்களை மன நோயாளிகளாகவே மாற்றி விடுவார்கள். ஆனால் நாங்களோ, அவர்களுக்கு ஒரு சில பயிற்சிகளைக் கொடுத்து எங்கள் வசமாக்கி, அவர்களின் ஆழ்மன எண்ணங்களை வெளிப்பட வைத்து, `இந்த சமூக முறையில் இதுதான் சாத்தியம், வேலி தாண்டினால் வாழ்க்கை சிக்கலாகவும், கேலிக்குரியதாகவும் ஆகி விடும்' என்று பேசி அவர்களை இயல்புநிலைக்குக் கொண்டு வருகிறோம்.

ஒருமுறை ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவனை என்னிடம் கூட்டி வந்தார்கள். நூற்றுக்குத் தொண்ணூறு மார்க் வாங்கும் அவன் அண்மைக்காலமாக ஐந்து, பத்து மார்க் வாங்குகிறான் என்பதுதான் அவனிடம் இருந்த பிரச்னை. இங்கே வருவதற்கு முன் அவனை மனநோய் மருத்துவர் ஒருவரிடம் கூட்டிப்போய் இருக்கிறார்கள். அவர் தூக்க மாத்திரை தந்ததில் அந்த மாணவன் வகுப்பறையில் கூட அசந்து தூங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. அவனை என்னிடத்தில் கூட்டி வந்தபோது அவனுக்கு மனரீதியாக என்ன பிரச்னை என்று நான் ஆராய்ந்தேன். அது டீன்ஏஜ் பருவத்தில் எல்லாருக்கும் வரும் பிரச்னைதான்.

அந்த மாணவனுக்கு அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி மீது ஒரு தலையாய்க் காதல். அதை அவளிடம் சொல்ல முடியாமல் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் அவன் இருந்திருக்கிறான். அதனாலேயே படிப்பில் கோட்டை விடவும் ஆரம்பித்திருக்கிறான். அவனிடம் நான், `இதற்கான வயது இதுவல்ல, அந்தப் பெண் உன்னைவிட படிப்பில் சூரப்புலியாக இருக்கிறாள். நீ படிப்பில் கவனம் செலுத்தி தொடர்ந்து அதிக மதிப்பெண் வாங்கியிருந்தால் அவள் அல்லவா உன்னைக் கவனித்திருப்பாள்? தவிர, அவளைவிட சிறப்பான, அழகான பெண் உனக்கு அமைவாள். அதை நீ ஏன் யோசிக்கவில்லை?' என்று பேசி மனரீதியான சிகிச்சை கொடுத்தேன். அவன் இப்போது படிப்பில் முன்பு போலவே அதிக மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்து விட்டான்.

ஆக, மூளை என்பது ஒரு கம்ப்யூட்டரில் வெளிப்படையாகத் தெரியும் ஹார்டுவேரைப் போன்றது. அதற்குள் மெமரி செய்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை நாம் சாஃப்ட்வேர் என்கிறோம். அந்த சாஃப்ட்வேருக்கு சிகிச்சை தருவதற்குப் பதில் ஹார்டுவேருக்கு சிகிச்சை தருவது சரியில்லை அல்லவா? அதைப்போலத்தான் சிலர் மனோதத்துவ மருத்துவர்களான எங்களிடம் வந்து பெற வேண்டிய சிகிச்சைக்குப் பதில், மனநோய் மருத்துவர்களிடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். மனநோய் மருத்துவர்களும் மனநல மருத்துவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்வதால் சைக்காலஜிஸ்ட் என அழைக்கப்படும் எங்களிடம் செல்ல வேண்டிய சிலர் திசைமாறி அவர்களிடம் போய் விடுகிறார்கள்.

இப்போது விவரம் தெரிந்து என்னிடம் சிகிச்சைக்கு வரும் அதிகம் பேர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள்தான். அவர்களை `கோஹினிட்டிவ் தெரபி' எனப்படும் விழிப்புணர்வு சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி வருகிறேன். பொதுவாக தம்பதிகளுக்கிடையேதான் பாலுறவு தொடர்பான மனப்பிரச்னைகள் வரும். அந்தப் பிரச்னை இப்போது எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் மாணவ மாணவிகளிடம் வருவதுதான் எனக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது.

கடந்த இரண்டாண்டுகளாக மதுரை, பெங்களூரு, அருப்புக்கோட்டை, திருச்சி, உடுமலை, கோவை, பாலக்காடு உள்ளிட்ட நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், ஐ.டி. நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்காக நான் மனோதத்துவ சிகிச்சை முகாம்களை நடத்தியிருக்கிறேன். பள்ளி மாணவர்களுக்குத் தரும் பயிற்சியைப் பொறுத்தவரை பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இருக்கின்றன'' என்றவர், சற்று நிறுத்தி விட்டு தொடர்ந்தார்.

``இந்த மனோதத்துவ முகாம்களின் மூலம் மாணவர்களில் வெறும் ஐந்து சதவிகிதம் பேர்தான் எந்தவித பாலியல்ரீதியான மனஉளைச்சலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற தகவல் எனக்குத் தெரிய வந்தது. மற்ற மாணவர்களோ பெற்றோரின் பாசத்துக்கு ஏங்குபவர்களாகவும், சக மாணவியின் அரவணைப்புக்கு ஏங்குபவர்களாகவும், பாலியல்ரீதியாக ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு குற்ற உணர்வுடன் படிப்பில் நாட்டமில்லாமல் இருப்பவர்கள் எனவும் தெரிய வந்தது. நன்றாகப் படிக்கிற நிறைய மாணவர்களுக்கு ஏழாவது, எட்டாவது வகுப்பை எட்டும்போதுதான் பாலியல் பிரச்னை பாடாய்ப்படுத்துகிறது. என்னிடம் வந்த ஒரு மாணவன் `மூன்றாம் வகுப்பிலிருந்தே சுயஇன்பப் பழக்கத்திற்கு தான் அடிமையாக இருப்பதாகச் சொன்னான். `ஏன் அப்படிச் செய்தாய்?' என்று கேட்டபோது, `அப்படிச் செய்தால்தான் அது பெரிசாகும் என்று நண்பன் சொன்னதாகச் சொன்னான். அவனை ஒருமாதம் வரை மனப்பயிற்சிக்கு உட்படுத்திய நான்," அப்படிச் செய்வதால் உன் சக்தி வெளியேறுகிறது. அதனால் படிப்பில் கவனம் குறைகிறது. நாளை உனக்குத் திருமணம் ஆகும்போது உன்னிடம் தேவைப்படும் சக்தி இருக்காது. அதனால் இந்தப் பழக்கத்தை நீ கைவிட வேண்டும்' என்று பேசிப் புரிய வைத்தேன். இப்போது அவன் நார்மலாகி நல்ல மதிப்பெண் எடுத்து வருகிறான்.

கோவை நகரின் நடுப்பகுதியில் குடிசைகள் நிறைந்த பகுதியில் உள்ள ஓர் அரசுப்பள்ளியில் தொண்ணூறு சதவிகித மாணவர்கள் மது, பீடி, சிகரெட், கஞ்சா, ஒயிட்னர் திரவப் போதை போன்றவற்றுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களது பெற்றோர்களும் அதைக் கண்டுகொள்வதில்லை. சில நல்ல மாணவர்களும் இவர்களைப் பார்த்து இந்த மது, பீடி, சிகரெட், கஞ்சாவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அந்தப் பள்ளியில்தான் இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயமும் நடந்திருக்கிறது'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார்.

``இங்கே பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் என்னிடம் உளவியல் சிகிச்சைக்காக வந்தான். அவன் பள்ளி செல்லும் வழியில் ஒரு லேத் பட்டறை இருந்திருக்கிறது. அதில் ஒரு பெண் தினம்தினம் இவன் பள்ளிக்குச் சென்றுவரும்போது தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் பேசி கேலி செய்து வந்திருக்கிறாள். ஒருமுறை அவளது வீட்டில் ஆளில்லாத சமயம் இவனை வலுக்கட்டாயமாக கூட்டிப்போய் பாலியல் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறாள்.

அதன்பின் அவளது தோழிக்கும் இந்தத் தகவல் தெரிந்து, அவளும் இவனை செக்ஸ் பசிக்கு உட்படுத்தி யிருக்கிறாள். `ஒரு வருடமாக நடந்து வரும் இந்தத் தொல்லையை என்னால் தவிர்க்க முடியவில்லை' என்று அவன் அழுதான். அவனிடம் நான், `உன்னிடம் எந்தத் தவறும் இல்லை. அந்தப் பெண்களிடம்தான் தவறு. இனி அந்த வழியில் போகாதே. அப்படியே அந்தப் பெண்கள் அழைத்தாலும் அம்மா, அப்பாவைக் கூட்டி வந்து விடுவேன் என்று மிரட்டு. படிப்பில் மட்டும் கவனம் செலுத்து' என்று அனுப்பி வைத்தேன்.

என்ன கொடுமை? அடுத்த நாள் பார்த்தால், அவனைப் போலவே முப்பத்திரண்டு மாணவர்கள் என்னிடம் வந்து அவர்களுக்கும் தலா இரண்டு, மூன்று பெண்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி அழ ஆரம்பித்தார்கள். நான் அதிர்ந்து போனேன். இவர்களுக்கு இப்படி ஒரு பழக்கம் ஏற்பட அந்த முதல்மாணவன் சொன்ன கதைதான் காரணமாக இருந்திருக்கிறது. இப்படி பள்ளி மாணவர்களை பாலியல் வலைக்குள் இழுத்தவர்களில் விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்களும் அடங்குவார்கள். தவிர, இந்த மாணவர்களின் பெண்கள் பட்டியலில் பல மாணவிகளும் இருந்ததுதான் கொடுமை. அந்த மாணவர்களுக்கெல்லாம் நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் எடுத்துக் கூறி நிறையப் பேச வேண்டியிருந்தது. அவர்களில் பலர் இன்னும் மனோதத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அந்த மாணவிகள் யார் யார் என்று தெரிய வந்தபோது பெற்றோர்களும் சரி, ஆசிரியைகளும் சரி, `சொல்லுடி, யாரடி அவன்?' என்று கேட்டு மாணவர்கள் முன் அந்த மாணவிகளை அடித்து அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்குத் தொடையில் காயம் என்றால் அதை மருந்து போட்டுக் குணமாக்குவதுதான் மருத்துவரின் வேலை. அதை விட்டு அந்தக் காயத்தை வெளியே சொல்லி, நோயாளியின் மனதை நோய்க்கு உள்ளாக்குவது சரியல்ல. இது தொடர்பாக சில ஆசிரியைகளுக்கும் நான் மனப்பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது'' என்றவர், இன்னும் சில பகீர் சம்பவங்களை எடுத்துரைத்தார்.

``ஒரு பன்னிரண்டு வயது மாணவியை, `மார்பு எடுப்பாகத் தெரிகிற மாதிரி துணி போடாதே' என்று அவளது அம்மா பாடாய்ப்படுத்தி வந்திருக்கிறார். மார்பு பெரிதாவது ஒரு குற்றம் என்பது போல புரிந்து கொண்ட அந்த அப்பாவிப் பெண், மார்பகத்தை தினமும் ஒரு கயிறால் இறுக்கிக் கட்டி வந்திருக்கிறாள். விளைவு? காலப்போக்கில் மார்பகம் இரண்டாகப் பிளந்து நான்கு மார்பகங்கள் போல ஆகிவிட்டது. அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்து, முதலிரவின்போது அதைப்பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்து விட்டார். அவளது மார்பகத்தில் ஏதோ நோய் இருந்து அறுவை சிகிச்சை நடந்திருப்பதாக கணவன் சந்தேகித்து, பிறகு அந்தத் திருமணம் விவாகரத்து வரை போய்விட்டது. அப்பா அம்மாவும், `எங்களுக்குத் தெரியாமல் நீ ஏதோ செய்து விட்டாய்?' என்று குற்றம்சாட்ட, அந்தப் பெண் கிட்டத்தட்ட மனநோயாளி போல ஆகி விட்டாள்.

அந்தப் பெண்ணை மனநோய் மருத்துவரிடம் கூட்டிப்போய், அவளை அவர் உண்டு இல்லை என்று ஆக்கிய பின் என்னிடத்தில் கூட்டி வந்தார்கள். நான் பேசி, மார்பகத்தில் அறுவை சிகிச்சை செய்ய வைத்து வேறொரு திருமணம் செய்யச் செய்தேன். இன்று அந்தப் பெண் சௌக்கியமாக இருக்கிறார்'' என்றார் மொஹைய்தீன்.

இதேபோல ஒர்க்ஷாப் வைத்திருக்கும் பையன் ஒருவன் ஒரு மாணவியுடன் பாலியல் தொடர்பு வைத்திருக்கிறான். ருசிகண்ட பூனையாக மாறிய அந்த மாணவி இன்னும் இரண்டு மாணவிகளை அந்தப் பையனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறாள். இரு மாணவிகள் வாசலில் காவல் காக்க, ஒரு மாணவி உள்ளே அந்தப் பையனோடு சல்லாபிப்பது வழக்கமாகி இருக்கிறது. ஆறுமாத காலமாக நடந்த இந்த காமக்களியாட்டத்திற்குப் பின் அந்த மாணவிகளில் ஒருத்தி மருத்துவர் மொஹைய்தீனிடம் குற்றஉணர்ச்சி காரணமாக இதைச் சொல்லியிருக்கிறாள். அதன்பிறகு மற்ற இரண்டு மாணவிகளையும் அழைத்து அவர்களுக்கும் உளரீதியான பயிற்சி தந்தாராம் இவர்.

ஒன்பதாவது படிக்கும் மாணவி ஒருவருக்கு மாதவிடாய் நின்றுபோய் வயிறு வீங்கியிருப்பதாக அவளது தாய் என்னிடம் அழைத்து வந்தார். அந்தப் மாணவியிடம் பேசியபோது, `மயக்க மருந்து கொடுத்து மாணவன் ஒருவன் அவளது கற்பைக் கவர்ந்து கர்ப்பமாக்கிய விஷயம்' அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. அவளுக்கு முறையான சிகிச்சை அளித்து படிப்பில்நாட்டம் வரச் செய்தாராம் இவர்.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கம்ப்யூட்டரில் பலான சி.டி.க்களைப் பதிவு செய்து தன் சக மாணவர்களுக்கு தலா இருபது ரூபாய், முப்பது ரூபாய்க்கு விற்றுவந்த சம்பவத்தையும், அந்த சி.டி.க்களை பார்த்த மாணவர்கள் பிஞ்சிலேயே பழுத்து பல மாணவிகளுடன் மன்மதலீலை நடத்திய கொடுமைகளையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் மொஹைய்தீன்.

``இந்தச் சீரழிவுக் கலாசாரத்துக்கு வெறும் மீடியா, சினிமா மட்டுமே காரணமல்ல. பெற்றோர்களும் கூட காரணம்தான். சில குடும்பத் தலைவர்கள், `பிள்ளை தூங்கி விட்டான்' என்று நினைத்து செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். அதை எக்குத்தப்பாகப் பார்த்து விடும் குழந்தைகள் தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை வாகாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். `நம் நாட்டைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பிறகுதான் செக்ஸ் என்பது உகந்ததாக இருக்கும்' என்பதை ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த அவலம் அகலும். இல்லாவிடில் இது அதிகமாகி சமுதாயத்தையே பாதித்து விடும். இதுதான் சைக்காலஜிஸ்ட்களான நாங்கள் சொல்லும் செய்தி'' என்று ஒரு மெசேஜோடு முடித்துக் கொண்டார் மொஹைய்தீன்.

reporter

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!