Wednesday, April 9, 2014

சபாஷ் தினமணி

பக்கத்து வீடு பற்றி எரியும்போது நாம் மட்டும் நிம்மதியாகத் தூங்க முடியுமா? இந்தியாவின் துரதிர்ஷ்டம், நம்மைச் சுற்றி இருக்கும் அண்டை நாடுகள் அனைத்திலுமே உள்நாட்டுப் பிரச்னைகள். பிரதமர் மன்மோகன் சிங் மியான்மருக்குத்தான் தனது கடைசி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அப்போதாவது, மியான்மரின் உள்நாட்டுப் பிரச்னைகள் இந்திய ஊடகங்களில் முன்னுரிமை பெற்றதா என்றால் இல்லை. இலங்கையில் நடைபெறும் இன அழிப்புக்கு எள்ளளவும் குறைவில்லாத இன அழிப்பு முயற்சி மியான்மரிலும் நடைபெற்று வருகிறது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கு மியான்மர் மாநிலமான ராக்கைனில் வெடித்த கலவரமும் வன்முறையும் நீறு பூத்த நெருப்பாக இருந்தது மாறி, கடந்த ஒரு மாதமாக மியான்மரின் ஏனைய பகுதிகளிலும் தீவிரமடைந்திருப்பது, நாம் கவலைப்பட்டாக வேண்டிய ஒன்று. வங்கதேசத்தையும், நமது மிசோரம் மாநிலத்தையும் ஒட்டிய ராக்கைன் பகுதியில், மியான்மரில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்
களுக்கு எதிரான இந்த வன்முறைத் தாக்குதல் மனித உரிமை மீறல் பிரச்னையாகவும் மாறியிருக்கிறது.
ராக்கைனிலும், மியான்மரின் ஏனைய பகுதிகளிலும் வெடித்
திருக்கும் கலவரம், பல நூற்றாண்டுகளாக மியான்மரை தங்கள் தாயகமாக்கிக் கொண்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரானது. மியான்மரிலுள்ள அரக்கான் எனும் பகுதியில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் கி.பி.1400 முதல் அந்தப் பகுதியைத் தங்கள் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். நாரமெய்க்லா என்கிற புத்த அரசரின் அவையில் ஆலோசகர்களாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள்.
கி.பி.1785இல் தென் மியான்மரிலிருந்து படையெடுத்து வந்த புத்த மதத்தைச் சேர்ந்த பர்மியர்கள், அப்போது அரக்கான் பகுதியில் வாழ்ந்து வந்த ஏறத்தாழ எட்டு லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்களில் குறைந்தது 35,000 பேரையாவது கொன்று குவித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதெல்லாம் பழைய கதை. இப்போது பர்மா என்பது மியான்மராகப் பெயர் மாற்றப்பட்டு, அரக்கான் உள்ளிட்ட ராக்கைன் பிராந்தியம் புத்தமதச் சார்புள்ள ராணுவத்தின் அதிகாரத்தில் இருக்கிறது. பெயருக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, குடியரசுத் தலைவர் இருந்தாலும்கூட மியான்மரின் நிர்வாகம் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், சமூக மேலதிகாரம் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டிலும்தான் இருக்கின்றன.
புத்தமத வெறியர்கள் கடந்த ஓராண்டாக மசூதிகள், ரோஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் என்று திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி, அவர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றிருக்கிறார்கள். ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைந்து சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் அகதிகள் என்றும், அவர்கள் வங்கதேசத்திற்கு விரட்டப்பட வேண்டும் என்பதும்தான் மியான்மரின் பெரும்பான்மையினரான புத்தமதத்தவர்களின் கருத்து. மியான்மர் முழுவதுமே இந்த இன அழிப்பு திட்டமிட்டே நடத்தப்படுகிறது.
இந்த இன அழிப்பு முயற்சியில் புத்த பிக்குகள் ஈடுபட்டிருப்பது மட்டுமல்ல, மியான்மர் அரசே மறைமுகமாக இதை ஆதரிக்கிறதோ என்றுகூட சந்தேகிக்கத் தோன்றுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாகவே, மியான்மரின் ராணுவ அரசு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை ஆதரித்து, அதன் மூலம் பெரும்பான்மை புத்தமதத்தினரின் நம்பிக்கையைப் பெற முற்பட்ட வண்ணம் இருந்திருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தீன் செய்னின் ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகள் பிடிக்காமல், ராணுவம் மறைமுகமாக இதுபோன்ற கிளர்ச்சிகளை ஊக்குவித்து அதன் மூலம் அரசைக் கவிழ்க்க முயற்சிக்கிறதோ என்கிற ஐயப்பாட்டிற்கும் இடமுண்டு.
ஏறத்தாழ 1,40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களுக்கு முறையாக உணவு, உடை, மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதில்லை. ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் பல கிராமங்களில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு புத்தமதத்தினரால் நடத்தப்படும் இந்த இன அழிப்பை ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு கண்டித்திருக்கிறது.
இலங்கையில் சிறுபான்மை இந்துக்கள்; மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம்கள். இதுதான் வித்தியாசம். இந்த இன அழிப்புகளுக்குப் பின்னால் அன்பை போதித்த புத்தரின் வழிநடப்பவர்கள். என்ன அநியாயம் இது...
ஆமாம், ஆங் சான் சூ கீ இதுபற்றி எதுவும் மூச்சுவிடாமல் இருக்கிறாரே, ஏன்? அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவருக்கு இன அழிப்பு ஒருவேளை தவறாகப் படவில்லை போலிருக்கிறது...
http://www.dinamani.com/editorial/2014/04/10/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82-%E0%AE%95%E0%AF%80-/article2159500.ece

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!