Thursday, May 22, 2014

மோடி வெற்றி குறித்து,பள்ளி வாசல் பயான்

விடுதலைக்குப் பிந்தைய பொதுத் தேர்தல்களிலேயே நடந்து முடிந்த தேர்தல் ஒருவகையில் வித்தியாசமான முடிவைத் தந்திருக்கும் தேர்தல். 282 இடங்களைப் பிடித்த பாரதிய ஜனதா கட்சியில் ஒரு எம்.பி-கூட முஸ்லிம் கிடையாது. முஸ்லிம்கள் 18% வசிக்கும் உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு முஸ்லிம்கூட வெல்லவில்லை. மத்தியப் பிரதேசத்திலிருந்தும் முஸ்லிம் எவரும் தேர்வுசெய்யப்படவில்லை. 543 தொகுதிகளில் மொத்தம் 24 பேர் மட்டுமே முஸ்லிம்கள். அதிலும் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தினர். இந்திய மக்கள்தொகையில் 14% பங்குவகிக்கும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் வெறும் 4.4% மட்டுமே. 

சிதறிய முஸ்லிம் வாக்குகள்
 
மோடியின் வெற்றிவாய்ப்புகுறித்து முஸ்லிம்கள் கவலைப்பட்டதும், மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு இருந்த சாத்தியமும் இயற்கைதான். ஆனால், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பெரும்பாலான தொகுதிகளில்கூட வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக அவர்கள் இல்லை என்பதே நிதர்சனம். மேலும், பா.ஜ.க. எதிர்ப்பின் அடையாளமான அவர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறிப்போய் அது பா.ஜ.க-வுக்குச் சாதகமாக ஆகியிருக்கிறது என்பதை எவரும் எளிதில் புரிந்துகொள்ளலாம். சான்றாக, உத்தரப் பிரதேசத்தின் மீரட், மொராதாபாத், சம்பல் போன்ற பல தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் தமக்குள் மோதிக்கொள்ள, பா.ஜ.க. எளிதாக வெற்றிபெற்றுள்ளது. கூடுதலாகக் கவனிக்க வேண்டிய விஷயம், பா.ஜ.க-வில் போட்டியிட்ட ஐந்து முஸ்லிம்களும் தோல்வி கண்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் கட்சியிலிருந்து ஒருவர் வென்றது மட்டுமே விதிவிலக்கு. தவிர, தேர்தல் முடிவு புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டெல்லியில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள சில தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குகள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக விழுந்திருப்பதும் தெரியவருகிறது. வாரணாசியில் ஷியா முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களித்திருப்பதாகவும் தெரிகிறது. இவை விதிவிலக்குகள்தானே தவிர, பொதுவான நிலவரமாகக் கருத முடியாது.


தேர்தல் முறையின் கோளாறு
 
தேசிய ஜனநாயகக் கூட்டணி அபாரமான பெரும்பான்மை பெற்றிருக்கிறது என்றாலும், மொத்த வாக்குகளில் வெறும் 31% வாக்குகளிலேயே பா.ஜ.க. பெரும்பான்மை பெற்றுவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 38.5% வாக்குகளைப் பெற்று 336 இடங்களைப் பெற்றுவிட்டது. ஆக, வாக்குகள் சிதறியதே பா.ஜ.க-வின் மகத்தான வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. புள்ளிவிவரங்களைக் குறிப்பிடுவதாலேயே பா.ஜ.க-வின் வெற்றியைக் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் கருதத் தேவையில்லை. 

மூன்று விஷயங்கள்
 
எது எப்படியிருந்தாலும் பா.ஜ.க. வெற்றி கண்டாயிற்று. இப்போது முஸ்லிம்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை அலச முனையும்போது, காவிப் பரிவாரத்தின் முக்கிய கோஷங்கள் மூன்று நினைவுக்கு வருகின்றன - ராம ஜென்மபூமி, பொது சிவில் சட்டம், காஷ்மீர் பிரச்
சினை ஆகியவை. இவற்றில் ராம ஜென்மபூமி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. மற்ற இரண்டு பிரச்சினைகளையும் பா.ஜ.க. கையில் எடுக்க முடியும். ஆனால், எடுக்குமா என்பது ஒரு பெரிய கேள்வி. குறைந்தபட்சம் மாநிலங்களவையில் தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காதவரை அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் எந்த நடவடிக்கையிலும் பா.ஜ.க. இறங்காது. அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல்லை நீக்குவார்களோ என்று இஸ்லாமிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். இப்போதைக்கு இது சாத்தியமில்லை. அதிலும் குறிப்பாக, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை யில் உள்ள வாசகங்களைத் திருத்துவது சாத்தியமே இல்லை.
வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, ஒரு பள்ளி
வாசலில் பயான் (சொற்பொழிவு) ஆற்றிய இமாம் ஒருவர், “இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தொடங்கி, சிலுவைப் போர்களையும், மங்கோலியர்களின் தாக்குதல்களையும் தாங்கி வளர்ந்தது. அன்று சந்தித்த சோதனைகளைவிட புதிதாகச் சோதனைகள் எதுவும் நமக்கு வந்துவிடப்போவதில்லை.எல்லாம் அல்லாவின் நாட்டப்படியே நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளைக் கண்டு இஸ்லாமியர்கள் கலக்கம் கொள்ளத் தேவையில்லை” என்று கூறியதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
இதுதான் நடப்பு நிலை. கலக்கம் கொள்ளத் தேவையில்லை என்பதல்ல, கலக்கம் கொள்வதில் பயனில்லை என்பதே சரி. என்ன நடக்குமோ என முஸ்லிம்கள் மனங்களில் சற்றே கலக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக, பா.ஜ.க-வின் முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டிருப்பதால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பா.ஜ.க-வுக்கு எதிராக வாக்களித்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படும் சாத்தியம் இருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்கிற மோடியும் பா.ஜ.க-வும் வெளிப்படையாக முஸ்லிம்களைத் தாக்கிப் பேசவோ, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கவோ இல்லை.
ஆரம்ப கட்டத்திலேயே தமது பிம்பத்தைக் குலைத்துக்கொள்ள முனைய மாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. பிரதமராக மோடியின் உடனடிக் கவனம் வெளிப்
படையாகப் பார்க்கும்போது வளர்ச்சி, விலைவாசி, ஊழல் போன்றவற்றின் மீதுதான் இருக்குமென்று இப்போதைக்குத் தெரிகிறது. ஆனால், சங்கப் பரிவாரத்தின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்களை மோடி அரசு எப்படிக் கையாளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- ஆர். ஷாஜஹான், எழுத்தாளர், தொடர்புக்கு: shahjahanr@gmail.com

THE HINDU,TAMIL 
 வெள்ளி, மே 23, 2014

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!