Saturday, October 11, 2014

சரித்திரப் பறவை-ஹுத் ஹுத்

 கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு ஒவ்வொரு நாட்டின் சார்பில் பெயர் வைக்கப்படுவது வழக்கம்.

தற்போது வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் முதல் வலுவான புயலுக்கு 'ஹுத்ஹுத்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது ஓமன் நாட்டின் சார்பில் வைக்கப்பட்ட அரபிப் பெயர். குர்ஆனில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பெயர் கூறப்பட்டுள்ளது.

துருக்கி, இஸ்ரேல், சிரியா, ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இப்பெயர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சிரியா மன்னர் சாலமன் என்ற சுலைமானின் ராணுவத்தில் தகவல் தொடர்புக்காகவும் இப்பறவை பயன்படுத்தப்பட்டிருப்பது சுவாரசியம். இதுகுறித்து இஸ்லாமிய அறிஞர் அ.முகம்மது கான் பாகவி கூறியதாவது. ஹுத்ஹுத் என்ற அரபிப் பெயர் ஒரு பறவையைக் குறிப்பதாகும்.

தமிழில் இது ‘கொண்டலாத்திப் பறவை’ என்று அழைக்கப்படுகிறது. சிரியாவை ஆண்ட மன்னரும், இறைத் தூதருமான சுலைமானுக்கு (ஆங்கிலத்தில் சாலமன்) நெருங்கிய நண்பரைப் போன்றது இப்பறவை.

அவர் எங்கு சென்றாலும் இதையும் கூடவே எடுத்துச் செல்வார். இது பூமிக்கு அடியில் தண்ணீர் எங்கு ஓடுகிறது என்பதை சுட்டிக்காட்டும் திறன் படைத்தது. பாலைவனப் பயணத்தின்போது, தண்ணீர் இருக்கும் இடத்தின் அருகில் தரையைக் கொத்தி, தன்னுடைய கொண்டையை ஆட்டி ஆடும். அங்கு தண்ணீர் இருக்கிறது என்று தெரிந்து, குழி தோண்டி தண்ணீர் எடுத்து தாகம் தீர்ப்பார்கள்.

சரித்திரப் பறவையான 'ஹுத்ஹுத்துடன் சுலைமான் மன்னர் பேசவும் செய்வார். அவரைவிட்டுப் பிரிந்து சென்று மீண்டும் திரும்பி வந்த 'ஹுத்ஹுத்', ‘‘ஏமன் என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கு சூரியனை வழிபடுகிறார்கள். அந்த நாட்டை பல்கீஸ் என்ற பெண் ஆட்சி செய்கிறாள். என்று கூறுகிறது.

இதன் பிறகு, இஸ்லாமிய கோட்பாடுகளை எழுதி, ஏமன் அரசி பல்கீஸுக்கு 'ஹுத்ஹுத்' பறவை மூலம் சுலைமான் தூது அனுப்புவதாக வரலாறு. இவ்வாறு மார்க்க அறிஞர் கான் பாகவி தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் இப்பறவை ‘ஹூப்போ’ என்று அழைக்கப்படுகிறது. இது இஸ்ரேல் நாட்டின் தேசியப் பறவை. இதன் தலையில் நீளமான ஊசி போன்ற கொண்டை உள்ளது. பெரும்பாலும் தண்ணீர் இருக்கும் இடத்தின் மீது தனது ஊசிக் கொண்டையை குடைபோல விரித்து அழகாக ஆடும். அதனால் தமிழில் கொண்டலாத்திப் பறவை எனப்படுகிறது.

மரங்கொத்தி, மீன் கொத்தி வகையைச் சேர்ந்தது. பாலைவனங்களில் அதிகம் வாழும். இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் பழுப்பு நிறத்திலும், கருப்பு, வெள்ளை கலந்த பட்டையுடனும் காட்சியளிக்கும்.

1 comment:

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!